`எனக்கு கேன்சரா?' - இணையத்தில் வைரலான செய்தி குறித்து நடிகர் சிரஞ்சீவி விளக்கம்
ஹைதராபாத்
தான் புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதாக வெளியான செய்தி குறித்து நடிகர் சிரஞ்சீவி விளக்கமளித்துள்ளார்.நடிகர் சிரஞ்சீவி புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்டதாக கடந்த சில தினங்களாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளார் சிரஞ்சீவி.
தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில் கூறியிருப்பதாவது, சில தினங்களுக்கு முன்பு, ஒரு புற்றநோய் மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வின் அவசியம் குறித்து பேசினார். தொடர் பரிசோதனைகளின் மூலம் புற்றுநோயை தடுக்கமுடியும் என்று பேசியிருந்தேன். மேலும் முன்னெச்சரிக்கையாக நான் ஒரு பெருங்குடல் சோதனையையும் மேற்கொண்டது குறித்தும், புற்றுநோய் பாதிப்பில்லாத பாலிப்கள் கண்டறியப்பட்டு அவை அகற்றப்பட்டது குறித்து குறிப்பிட்டேன். நான் பரிசோதனை செய்திருக்காவிட்டால், அது கேன்சராக மாறியிருக்கும் என்று மட்டும்தான் நான் கூறியிருந்தேன்.
ஆனால் சில ஊடக நிறுவனங்கள் நான் பேசியதை சரியாக புரிந்து கொள்ளாமல், எனக்கு கேன்சர் என்றும், சிகிச்சையின் மூலமே நான் உயிர் பிழைத்தாகவும் நான் கூறியதாக எழுதியுள்ளனர். இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய உடல்நலன் குறித்து நலம்விரும்பிகள் பலரும் மெசேஜ் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இது அவர்கள் அனைவருக்குமான விளக்கம். அதுபோன்ற ஊடகர்களுக்கு என்னுடைய கோரிக்கை என்னவென்றால், விஷயத்தை புரிந்துகொள்ளாமல் முட்டாள்த்தனமான எதையும் எழுதாதீர்கள். இதன் காரணமாக பலபேர் கவலையும், பயமும் கொள்கிறார்கள்.